ராமநாதபுரம்
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
|வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக உருவாக்கிட மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார்.
வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக உருவாக்கிட மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார்.
வேளாண் தொழில் முனைவோர்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிள்ளதாவது:-
வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 86 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் படித்த பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக உருவாக்கி விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வங்கிக்கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்தில் கிராமத்தில் உள்ள பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையம், இயற்கை மற்றும் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் தயாரித்தல், உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் வினியோகம், மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை மையம் அமைத்தல், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல் முதலியவற்றிற்கு வேளாண்மை தோட்டக்கலை வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகள் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 80 சதவீதம் பொது, 19 சதவீதம் ஆதிதிராவிடர், 1 சதவீதம் பழங்குடியினர் மற்றும் மகளிர் 30 சதவீதம் என்ற விகிதத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பட்டப்படிப்பு சான்று, ஆதார் நகல், ரேஷன் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல், வங்கியில் கடன் பெற்ற பயனாளிகள் விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 2 வார இணையதள பயிற்சி அளிக்கப்படும்.
பயன்பெறலாம்
பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க நிதியுதவி வழங்கப்படும். வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி குறித்து கூடுதல் விவரங்கள் அறிய agriinfra.dac.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து கூடுதல் விவரங்கள் அறிய pmfme.mofpi.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். எனவே, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.