தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
|தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் கடன் உதவி ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் நேரடியாக கழிவு நீர் அகற்றும் பணி செய்வதை தவிர்க்கும் பொருட்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 50 விழுக்காடு மானியமாகவும், புதிய தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் இதர பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 40 விழுக்காடு மானியமாகவும், என மொத்தம் 213 நபர்களுக்கு 125.86 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 61.29 கோடி ரூபாய் மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ. அன்பரசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.