விழுப்புரம்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கடன் உதவி
|விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக கடனுதவி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்பெறலாம்
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம், பிறப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.