கடலூர்
சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி
|கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடன் திட்டம்
மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய பிரிவினரை சேர்ந்த மரபு வழி கைவினைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம்
மேலும் திட்டம் 1-ன் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி என்ற விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் https://cuddalore.nic.in/bc-mbc-minorities-welfare/என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
இந்த கடனுதவி பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பொருளாதார நிலையை மேம்படுத்த...
மேலும் விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர்- 607 001 என்ற முகவரியில் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளி கடற்கரை சாலை, கடலூர்-607 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட பொருளாதார கடனுதவி திட்டத்தை தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த கைவினை கலைஞர்கள் பயன்படுத்தி தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.