< Back
மாநில செய்திகள்
6,316 பயனாளிகளுக்கு ரூ.40¼ கோடியில் கடனுதவி
கடலூர்
மாநில செய்திகள்

6,316 பயனாளிகளுக்கு ரூ.40¼ கோடியில் கடனுதவி

தினத்தந்தி
|
3 Aug 2023 12:35 AM IST

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 6,316 பயனாளிகளுக்கு ரூ.40¼ கோடியில் கடனுதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

திட்டக்குடி,

கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டக்குடியில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான மதுபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திலிப்குமார் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், கைம்பெண்கள், சுயஉதவிக்குழுக்கள், கூட்டுறவு பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கான நுகர்வோர் கடன் உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 316 பயனாளிகளுக்கு ரூ.40 கோடியே 43 லட்சத்து 400 மதிப்பிலான கடனுதவியை வழங்கி பேசினார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

அப்போது அவர் பேசுகையில், திட்டக்குடி தொகுதியில் நலத்திட்ட உதவிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. திட்டக்குடி பஸ் நிலையத்தில் ரூ.1 கோடியில் திய மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டக்குடி தொகுதியில் உள்ள மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் தற்போது குடிநீரில் உப்புநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் துரைசாமி, முதன்மை வருவாய் அலுவலர் எழில் பாரதி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் இளங்கோ, உதவி பொது மேலாளர்கள் அருள், மலர்விழி, செந்தமிழ்செல்வி, திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், மங்களூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணை தலைவர், நகர செயலாளர் வி.பி. பரமகுரு, குமரவேல், நகர நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொது மேலாளர் பலராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்