< Back
மாநில செய்திகள்
8,625 பேருக்கு ரூ.61¼ கோடி கடன் உதவி
கடலூர்
மாநில செய்திகள்

8,625 பேருக்கு ரூ.61¼ கோடி கடன் உதவி

தினத்தந்தி
|
18 July 2023 12:33 AM IST

வடலூரில் நடைபெற்ற விழாவில் 8 ஆயிரத்து 625 பேருக்கு ரூ.61¼ கோடி கடன் உதவியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

வடலூர்

கடன் தொடக்க விழா

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிய கடன் தொடக்க விழா வடலூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு .ராஜாராம் முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார்.

விழாவில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், கைம்பெண்கள், சுயஉதவிக்குழுக்கள் உள்பட மொத்தம் 8 ஆயிரத்து 625 பேருக்கு ரூ.61 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 603 கடன் உதவியை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

மகளிர் உரிமைத்தொகை

அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 வழங்க உள்ளார். இதற்கான விண்ணப்பங்களை ரேஷன்கடை பணியாளர்கள் வீடு தேடி வந்து கொடுப்பார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்களை நம்பி பெண்கள் இருந்தனர். இன்று பெண்களை நம்பி ஆண்கள் இருக்கும் நிலை ஏற்றப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்க முடியாது என அனைவரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் தற்போது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆட்சியை கலைக்க

அமைச்சர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியை கலைக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்-அமைச்சர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளார்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த பொழுது மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு காப்பீடு அட்டை வழங்கினார். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஏ.டி.எம். அட்டை வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திலிப்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். இதில் விருதாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் இளங்கோ, உதவி மேலாளர்கள் பலராமன், மலர், செந்தமிழ்செல்வி, வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர்கள் கடலூர் ராஜா, வடலூர் தமிழ்செல்வன், துணை தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்