ராமநாதபுரம்
குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்க ரூ.5 கோடியில் கடன் உதவி
|ராமநாதபுரத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்க ரூ.5.11 கோடிக்கான கடன் உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்
ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான கடன் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கல்வி கடன் முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-
மீன்வளம்மிக்க இந்த மாவட்டத்தில் கடல் உணவுகள் மூலம் பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம். அதே போல் பனை மரங்களின் மூலம் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யலாம். மேலும் சுற்றுலா நகரமாக உள்ளதால் மகளிர் குழு மூலம் அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். விவசாயத்திற்கு இணையாக ஆடுகள் கோழிகள் வளர்த்து பயன்பெறலாம். தொழில் முனைவோர் ஆர்வம் காட்டி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை அமைத்து தங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்வதுடன் பிறருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கிடும் வகையில் செயல்பட வேண்டும். இந்த ஆண்டு ரூ.1200 கோடி தொழில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரத்து 600 கடன் உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய பொறியாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தொழில் முதலீட்டாளர் கழக மேலாளர் ராஜா மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.