நாகப்பட்டினம்
வெளிநாட்டில் வேலை இழந்தவர்கள் தொழில் தொடங்க கடன்உதவி
|கொரோனா பரவலால் வெளிநாடுகளில் வேலையிழந்த நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்தில் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் வெளிநாடுகளில் வேலையிழந்த நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க மானியத்தில் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுயதொழில்
தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டு வேலையை இழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் அவர்கள் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பொதுப்பிரிவினர் 18 வயதிற்கு மேலாகவும், 45 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும். பெண்கள், இட ஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் எனில் 18 வயதிற்கு மேலாகவும், 55 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும். வணிகம் மற்றும் சேவைத்தொழில் திட்டங்களுக்கு அதிக பட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் இருக்கும்.
ரூ.2½ லட்சம் மானியம்
அரசு, திட்டத்தொகையில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பத்தினை பதிவு செய்யவேண்டும்.
எனவே, வெளிநாடுகளில் இருந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலை இழந்து நாடு திரும்பிய நாகை மாவட்டத்தை சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள், இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.