< Back
மாநில செய்திகள்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி
நாமக்கல்
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி

தினத்தந்தி
|
31 Dec 2022 12:58 AM IST

மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி வழங்கப்பட்டு உள்ளது என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கிக்கடன், வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல்லில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடன்உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க இலக்காக இவ்வாண்டிற்கு ரூ.653 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 8,065 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.454.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. எனவே மகளிர் சுயஉதவி குழுவினர் கடனுதவிகளை பெற்று அதனை முறையாக செலுத்தி மகளிர் குழுவிற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் வளர்ச்சியினை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 848 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,693 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியே 12 லட்சம் வங்கிக்கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானியம், உற்பத்தியாளர் குழுக்களுக்கான தொடக்க நிதி உள்பட மொத்தம் 3,448 பயனாளிகள் பயன் பெறும் வகையில் ரூ.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார். பின்னர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் குழுவினரால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள், உணவு பொருட்கள் அடங்கிய திட்ட விளக்க கண்காட்சி அரங்கினை மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ், ஆட்மா குழுத்தலைவர்கள் பழனிவேல், அசோகன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, நாமக்கல் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்உதவி வழங்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்