நாகப்பட்டினம்
132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் உதவி
|நாகையில் நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகையில் நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
கூட்டுறவு வார விழா
நாகையில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அருளரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சுய உதவிக்குழுவினருக்கான கடன், பயிர்க்கடன் உள்பட மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடன் உதவி
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன்கள், நகை கடன்கள், கூட்டுப் பொறுப்புக் குழு கடன்கள், சுய உதவி குழு கடன்கள், வீட்டு வசதி கடன்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 27,016 விவசாயிகளுக்கு ரூ.139 கோடியே 69 லட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
கால்நடை பராமரிப்பு
கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு மாடு, கோழி மற்றும் மீன் வளர்க்க விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பாண்டில் இதுவரை 2,313 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
நகை கடன் நடப்பாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக இதுவரை 43,539 பேருக்கு ரூ.206 கோடியே 78 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மருந்துகள் விற்பனை
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் நடப்பாண்டில் இதுவரை ரூ.33 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் நாகை இணைப்பதிவாளர் பெரியசாமி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, நாகை ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, நகரசபை தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.