< Back
மாநில செய்திகள்
தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி

தினத்தந்தி
|
4 Aug 2022 5:35 PM GMT

கொரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.


கொரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

மானியத்துடன் கடன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின்போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழக அரசு கோவிட் உதவி மற்றும் தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்து உள்ளது. மானியத்துடன் கடன் மற்றும் ஊக்க திட்டம் என 2 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மானியத்துடன் கடன் திட்டம் கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோர்கள் மீண்டும் தொழிலை நிறுவிட அல்லது புதிய நிறுவனத்தை தொடங்க அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

தொற்று நோயால் பொருளாதார வீழ்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட தனிநபர்கள், உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத்துறை தொழில் நிறுவனத்தினர் இதன் மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பயிற்சி

மானியத்துடன் கூடிய திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை. 2-வது மாற்று திட்டத்தில் ஊக்குவிப்பு திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கு ஆனது.

ஊக்கத் திட்டத்திற்கு தொழில்நுட்ப மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் கோவிட் நோயால் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியானவர்கள்.மூலதன மானியமாக ஆலை மற்றும் எந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

கடன் திட்டம்

இந்தநிலையில், இந்த பிரிவுகளின்கீழ் உள்ள பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம்.

கோவிட் தொற்றுநோயால் பொருளாதார இழப்பை சந்தித்த தனிநபர்கள், தொழில்முனைவோர்கள் மீண்டும் தொழில் களை நிறுவ மானிய கடன் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்காக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்