< Back
மாநில செய்திகள்
திண்டிவனத்தில் பரபரப்பு  அம்மா உணவகத்தில் வழங்கிய பிரியாணியில் பல்லி  6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனத்தில் பரபரப்பு அம்மா உணவகத்தில் வழங்கிய பிரியாணியில் பல்லி 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தினத்தந்தி
|
13 Dec 2022 12:15 AM IST

திண்டிவனம் அம்மா உணவகத்தில் வழங்கிய பிரியாணியில் பல்லி விழுந்திருந்தது. இந்த உணவை சாப்பிட்ட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் மக்களுக்கு உணவு வினியோகம் நடைபெற்றது. பலர் சாப்பிடுவதற்காக வந்திருந்தனர்.

அந்த வகையில், பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வீரா கர்ணன் (வயது 34) காலை உணவு சாப்பிட சென்றார். அங்கு "வெஜிடபிள் பிரியாணி"யை வாங்கி சாப்பிட்டார். அப்போது, அதில் பல்லி ஒன்று இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

6 பேருக்கு சிகிச்சை

இதனால் அச்சமடைந்த வீராகர்ணன் அங்கு சாப்பிட வந்திருந்த மற்றவர்களிடமும் இதுபற்றி தெரிவித்தார். உடனே அவர்கள் அனைவரும் பதற்றத்துக்கு உள்ளானார்கள். இதையடுத்து சாப்பிட்டு கொண்டிருந்த புறங்கரை பகுதியை சேர்ந்த குழந்தைசாமி (63), மேல் ஒலக்கூர் குமார் மனைவி ஜெயந்தி (39), வைரபுரம் ராமகிருஷ்ணன் மகன் ஏழுமலை (40), பாஞ்சாலம் காத்தவராயன் மகன் குமரேசன் (32), சத்தியமங்கலம் சின்னதுரை மகன் பிரசாந்த் (30), வீரகர்ணன் ஆகியோர் தங்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில் அவசர, அவசரமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டர்களிடம் நடந்த விவரத்தை தெரிவித்து, உரிய சிகிச்சை பெற்றார்கள். அவர்களிடம் திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ. ஆய்வு

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன், அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

காலையில் உணவில் பல்லி விழுந்திருந்த நிலையில், மதிய உணவுகள் தயார் செய்யப்பட்டு வழக்கம் போல் அம்மா உணவகம் இயங்கியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்