சென்னை
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
|உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உலகம் முழுவதும் இன்று (19-ந்தேதி) உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அப்போலோ ஆஸ்பத்திரி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.
பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 80 டன் மணலை கொண்டு கல்லீரல் வடிவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மணல் சிற்பத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பல முக்கியத்துவம் வாய்ந்த மணல் சிற்பங்களை அவர் வடிவமைத்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இதே இடத்தில் தி.மு.க. ஆட்சியின் முதல் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் ஒரு மணல் சிற்பத்தை அமைத்திருந்தார். கலைஞரின் உருவத்தை மணல் சிற்பமாக வடித்தவர் இவர்.
உலகின் பலகோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சூழலில் அப்போலோ ஆஸ்பத்திரி இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்லீரல் நோயால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடின உழைப்பாளி. நாள் தோறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடைபயிற்சி சென்றுவிடுவார். உலகத்தில் எங்கு மாரத்தான் நடந்தாலும் சென்றுவிடுவார். எந்த நோக்கத்துக்காக இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டதோ அது மக்களிடம் சென்றடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, 'ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமாக வாழுங்கள்' என்னும் புத்தகத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எழிலன் எம்.எல்.ஏ., அப்போலோ ஆஸ்பத்திரி துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, அப்போலோ ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் சுனீத்தா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.