< Back
மாநில செய்திகள்
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரலில் புற்றுநோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை
சென்னை
மாநில செய்திகள்

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கல்லீரலில் புற்றுநோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
1 Nov 2022 2:04 PM IST

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 43 வயதுள்ள ஆணுக்கு சிக்கலான கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இதுகுறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பொறுப்பு முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:-

சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை சார்பில் குடல், கல்லீரல், கணையம் மற்றும் பிற நோய்களுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் 43 வயது ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் புற்றுநோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு நுண்துளை முறையில் மிகவும் சிக்கலான கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நோயாளிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, உணவு குழாயில் புற்றுநோய் ஏற்பட்டபோது, கீமோதெரபியுடன் கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஓராண்டுக்கு பின் கல்லீரலில் புற்றுநோய் பரவி இருப்பது தெரிய வந்தது.

ஆஸ்பத்திரியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் சுப்பையா சண்முகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பாதிப்புகள் இன்றி, அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் சுப்பையா சண்முகம் கூறியதாவது:-

நுண்துளை முறையில் செய்யப்படும் கல்லீரல் அறுவை சிகிச்சைகள் சிக்கலானவை. நோயாளிகளின் பராமரிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் தனிப்பட்ட நிபுணத்துவமும் தேவை. இந்த அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் பல லட்சம் ரூபாய் செலவாகும். அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்