< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

தினத்தந்தி
|
9 Oct 2022 1:08 AM IST

கிரைண்டர், மிக்சி பயன்பாடு அதிகரித்துள்ளதால் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து உள்ளது. அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எருமப்பட்டி

கிரைண்டர், மிக்சி பயன்பாடு அதிகரித்துள்ளதால் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து உள்ளது. அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அம்மிக்கல் தயாரிப்பு

பண்டைய காலத்தில் மாவு ஆட்டும் உரல் மற்றும் அம்மிக்கல் இல்லாத வீடுகளே இருக்காது. உரலில் மாவு ஆட்டி தோசை, இட்லி தயாரித்தால் அதில் கிடைக்கும் சுவையே தனி சுவை தான். இதேபோல் அம்மிக்கல்லில் மசாலா அரைத்து குழம்பு வைத்தால், அதிக வாசனையுடன் குழம்பு ருசியை கொடுக்கும். மேலும் திருமண நிகழ்ச்சியின் போதுகூட அம்மிக்கல் முக்கிய இடம் வகித்து வந்தது.

ஆனால் மின்சாதன பொருட்களான மிக்சி, கிரைண்டர் பயன்பாடு அதிகரித்து வருவதால் ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் பயன்பாடு குறைந்து கொண்டே வந்தது. முதலில் நகர்ப்புற மக்கள் மட்டுமே மிக்சி, கிரைண்டரை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் கிராமபுற மக்களும் மிக்சி, கிரைண்டருக்கு மாற தொடங்கினர். இதனால் அவற்றின் விற்பனை மந்தமாகி ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நலிவடைந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கைக்காட்டி மற்றும் கூலிப்பட்டி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அம்மிக்கல், ஆட்டுக்கல் மற்றும் மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் கல் தொட்டி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் தொட்டியை பொறுத்த வரையில், முத்துக்காப்பட்டியில் இருந்து கற்களை வாங்கி வந்து இதை செய்கின்றனர். இவர்கள் ஒரு கல் ரூ.1,500 வீதம் கொடுத்து வாங்கி வருகின்றனர். ஆனால் மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் கல் தொட்டி தற்போது ரூ.3 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது. தற்போது வண்டி வாடகை உள்பட அனைத்தும் உயர்ந்துவிட்ட நிலையிலும், கல் தொட்டியை விலை உயர்ந்த பாடில்லை. இதனால் நாளுக்கு நாள் தொழில் நலிவடைந்து வருவதால், இந்த தொழிலாளர்கள் விரக்தியின் விளிம்பில் இருந்து வருகின்றனர்.

உதவித்தொகை

இது குறித்து கைக்காட்டி பகுதியை சேர்ந்த முருகன் கூறியதாவது:-

மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் கல் தொட்டியை செய்ய சுமார் 5 முதல் 6 நாட்கள் உழைக்க வேண்டி உள்ளது. பொதுமக்கள் இடையே போதிய வரவேற்பு இல்லாததால், அவற்றை வண்டியில் வைத்து ஊர் ஊராக சென்று விற்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் இந்த தொழிலில் கிடைக்கும் லாபம் மிகவும் சொற்பமாக குறுகிவிட்டது.

நாங்கள் அனைவரும் வாடகை வீட்டிலேயே குடி இருந்து வருகிறோம். போதிய வருமானம் இல்லாததால், வீட்டுவாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் படிப்பில் எங்களது குழந்தைகள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சலுகைகள் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் எங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விற்பனை மந்தம்

கூலிப்பட்டியை சேர்ந்த துரைசாமி கூறியதாவது:-

இந்த தொழிலை நாங்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம். பொதுவாக எங்களிடம் வழிபோக்கர்கள் ஆட்டுக்கல்லை வாங்கி செல்கிறார்கள். மழைக்காலங்களில் எங்களால் வேலை செய்ய முடியாது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்குவது போல எங்களுக்கும் அரசு மானியத்தொகை வழங்க வேண்டும். மிக்ஸி வருவதற்கு முன்பு தினசரி ஒன்று அல்லது 2 ஆட்டுஉரல் விற்பனையாகி வந்தது. தற்போது வாரத்திற்கு ஒன்று அல்லது 2 விற்பனையாவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

அம்மிக்கல்லை பொறுத்த வரையில் முன்பு ரூ.150-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.600 வரை விற்பனை செய்தால் தான் கட்டுப்படியாகிறது. அதேபோல் ஆட்டுக்கல் முன்பு ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.1,500 வரை விலைபோகிறது. ஆனால் விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதால் வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் அம்மிக்கல், ஆட்டுக்கல் செய்ய கற்கள் முன்பு எளிதாக கிடைத்தது. தற்போது அனுமதி பெற்று கற்களை வெட்டி எடுப்பதற்கு பல்வேறு சிக்கல் இருந்து வருகிறது. எனவே எளிதில் கற்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்