கள்ளக்குறிச்சி
நேரடி வகுப்புகள் இன்று தொடங்குகிறது
|கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு நேரடி வகுப்பு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி
பள்ளியில் கலவரம்
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து நடைபெற்ற தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து தளவாட பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இதில் மாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்தனர்.
கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்குள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சக்தி மெட்ரிக் பள்ளியை மறுசீரமைக்க அனுமதிகோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பில் மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளியில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து இன்று(திங்கட்கிழமை)முதல் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் 3-ம் தளத்தை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்ட கலெக்டர், கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு ஆணையிட்டார். அதன் பேரில் கலெக்டர் முன்னிலையில் பள்ளியின் 3-ம் தளத்தை ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக்ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் தாசில்தார், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
குறிப்பு:- 2-வது தலைப்பில் திருத்தம்