நீலகிரி
கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி
|விஜயதசமி பண்டிகையையொட்டி அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின் இறுதியில், 9-வது நாள் ஆயுத பூஜையாகவும், 10-வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாட்களை தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர், தங்களது குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இதன்படி தங்க மோதிரத்தால் குழந்தைகளின் நாவில் ஓம் என்று அர்ச்சகர் கோவிந்தன் நம்பூதிரி எழுதினார். இதையடுத்து தட்டில் நிரப்பப்பட்ட அரிசியில் குழந்தைகளின் விரலை பிடித்து பெற்றோர் ஓம் என எழுதினர். அய்யப்பன் கோவிலில் நேற்று நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று புதிதாக தொழில் தொடங்குபவர்கள், வாகனம் வாங்கியவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள் அனுப்பி மகிழ்ந்தனர். மேலும் கடந்த இரண்டு வாரமாக விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். விஜயதசமி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இதேபோல் கோத்தகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கெடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைத்தனர். கோவில் நம்பூதிரி வரதராஜன் குழந்தையின் ஆள்காட்டி விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைத்தார். பின்னர் தங்கத்தாலான எழுத்தாணி கொண்டு, குழந்தையின் நாவில் எழுதினார். இதேபோல கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் குழந்தைகள் பங்கேற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்பது நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் தினசரி பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற்றன. விஜயதசமி தினமான நேற்று கோவில் வளாகத்தில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகேய குருக்கள் குழந்தைகளுக்கு நாவில் தங்க எழுத்தாணி மூலம் குறியிட்டு வித்யாரம்பத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தை தொடங்கி வைத்தனர்.