< Back
மாநில செய்திகள்
கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படும்-மதுபிரியர்கள் குமுறல்
அரியலூர்
மாநில செய்திகள்

கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படும்-மதுபிரியர்கள் குமுறல்

தினத்தந்தி
|
9 Jan 2023 12:00 AM IST

'டாஸ்மாக்' கடைகளில் நேரத்தை குறைத்தால் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படும் என மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுவகைகள் கிடைப்பதில்லை

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த மதுபிரியர் சரவணகுமார்:- தற்போது காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகிறது. 'டாஸ்மாக்' கடைகளில் தற்ேபாது மதுப்பிரியர்கள் கேட்கும் மதுவகைகள் சரிவர கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட மதுவகைகள் மட்டுமே கிடைக்கிறது. இந்தநிலையில் 'டாஸ்மாக்' கடைகள் பிற்பகல் 2 மணிக்கு திறந்தால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும். குறிப்பாக தற்போது ஒரு குவாட்டர் கள்ளச்சந்தையில் ரூ.200-க்கு விற்கப்படுகிறது. 2 மணிக்கு திறந்தால் ஒரு குவாட்டர் ரூ.250-க்கு முதல் ரூ.300 வரை விற்கப்படும்.

'டாஸ்மாக்' கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலின் விலை ரூ.130. ஆனால் கடையில் இருப்பவர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அல்லது ரூ.10 சேர்த்து விற்கின்றனர். இதை வாங்கி விற்பவர்கள் தற்போது ரூ.200 விற்பனை செய்கின்றனர். 'டாஸ்மாக்' கடைகளில் நேரத்தை குறைத்தால் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கள்ளச்சந்தையில் விற்பனை

ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி பாபு:- நான் வேலைக்கு சென்றால் ரூ.400 முதல் ரூ.450 வரை கூலி கிடைக்கும். இதில் அரசு மதுபானக்கடைக்கு சென்று ரூ.130 குவாட்டரை ரூ.135 முதல் ரூ.165-க்கு வாங்கி குடிப்பேன். ஒரு சில நேரங்களில் வேலையை முடித்துவிட்டு இரவு சென்றால் 'டாஸ்மாக்' கடையை மூடிவிடுவார்கள். இதனால் கள்ளச்சந்தையில் ரூ.200 கொடுத்து தான் மதுகுடிக்க வேண்டியுள்ளது. இந்தநிலையில் 'டாஸ்மாக்' கடைகளில் நேரத்தை குறைத்தால் கள்ளச்சந்தையில் விற்கப்படும் ஒரு குவாட்டர் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்படும். இதனால் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது மனைவியிடம் ரூ.100 அல்லது ரூ.150 மட்டுமே மீதம் கொடுக்க இயலும். கொரோனா காலங்களில் ரூ.130-க்கு விற்பனையான குவாட்டர், ரூ.700-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. எனவே 'டாஸ்மாக்' கடைகளில் நேரத்தை குறைத்தால் கள்ளச்சந்தையில் விற்பவர்கள் கொடி கட்டி பறப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்