திருவாரூர்
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் விற்பனையாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
|திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 3 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 3 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுக்கடைகளில் ஆய்வு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பாகவும் மதுபான விலை பட்டியல் அறிவிப்பு பலகை வைப்பதற்கு அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் மூலம் அவ்வப்போது ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.
கூடுதல் விலைக்கு விற்பனை
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம்சந்தர் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
அப்போது 3 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த 3 கடைகளின் விற்பனையாளர்களையும் பணியிடை நீக்கம் செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.
3 பேர் பணியிடை நீக்கம்
அதன்படி மன்னார்குடி அருகே உள்ள பேரையூரில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ராஜ்கண்ணன் (வயது45), முத்துப்பேட்டை டவுன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் சுரேஷ் (50), நன்னிலம் மணவாழம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் குலோத்துங்கசோழன் (45) ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்று கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் கண்டறியப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.