நாகப்பட்டினம்
மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல்
|மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாராயம் கடத்தல்
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று நாகூர் வெட்டாற்று பாலம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
அவற்றை போலீசார் சோதனை செய்தபோது 2 பேரும் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட்டுகள், 90 மில்லி லிட்டர் அளவு கொண்ட 500 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.