காகிதக் குடுவையில் 90 மி.லி. மது விற்கும் திட்டம் - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
|காகிதக் குடுவையில் 90 மி.லி. மது விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் 90 மி.லி. மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்.
காகிதக் குடுவைகளில் 90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவாக 180 மி.லி. மது மட்டுமே கிடைப்பதாகவும், அதன் குறைந்தபட்ச விலை ரூ.140 என்பதால், அவ்வளவு பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் தான் குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றும், குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்வதன் மூலம் கள்ளச் சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது.
இதே டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டும் 90 மி.லி. மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்யத் துடித்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அப்போது மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளும், ஆபத்துகளும் ஏற்படுவதாகவும், அதைத் தடுக்கவே காகிதக் குடுவைகளில் மதுவை அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிலைப்பாடுகளில் இருந்து ஓர் உண்மை தெளிவாக புரிகிறது. எப்படியாவது 90 மி.லி. காகிதக் குடுவை மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, மதுவை ஆறாக ஓட விட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாகும். அதற்காக கடந்த ஆண்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணமாகக் காட்டிய தமிழக அரசு, இப்போது கள்ளச்சாராய விற்பனையை காரணமாக காட்டுகிறது. தமிழக அரசின் இந்த நோக்கம் தீமையானது. காகிதக் குடுவைகளில் 90 மி.லி. மது அறிமுகம் செய்யப்பட்டால் அது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தையும் சீரழித்து விடும்.
காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க்ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அதை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அதனால், 90 மி.லி. மது அறிமுகம் செய்யப் படுவது மிகப்பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும். இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு மாணவன் 2 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 2 அல்லது 3 டாஸ்மாக் மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் தான் மாணவர்கள் மிகவும் எளிதாக மதுவை வாங்கி வகுப்புகளில் வைத்து குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்போது காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால், அதை மாணவர்களும், சிறுவர்களும் மிகவும் எளிதாக வாங்கி, வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் நொறுக்குத் தீனிகளைப் போல புத்தகப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை உருவாகி விடும்.
மது தீண்டத் தகாத பொருள் என்ற தயக்கம் உடைக்கப்பட்டு, அதுவும் ஒரு குளிர்பானம் என்ற எண்ணம் உருவாகி விடும். அனைவரும் தங்களில் சட்டைப் பைகள் மற்றும் பேண்ட் பைகளில் காகித மதுக் குடுவைகளை வைத்து எடுத்துச் செல்வதும், பேருந்து, தொடர்வண்டி, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து குடிப்பதும் சர்வ சாதாரணமாகி விடும். இது அடுத்த தலைமுறைக்கு அரசு செய்யும் பெருந்துரோகம் ஆகும். இனி வரும் தலைமுறைகள் சீரழிவதற்கு இதுவே காரணமாகி விடும்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் எளிதாக வாங்கும் வகையில் குறைந்த விலையிலோ, குறைந்த அளவிலோ விற்கக் கூடாது என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஆகும். 90 மி.லி. அளவில் காகிதக் குடுவைகளில் மது விற்பனை செய்வதற்கும் இந்த வாதம் பொருந்தும். 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது. புகையிலைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதை தடுக்க, அதன் மீது அதிக அளவில் பாவ வரிகளை விதித்து விலையை உயர்த்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல், மதுவின் விலையும் எட்டாத உயரத்தில் தான் இருக்க வேண்டும்.
ஆனால், மதுவின் விலை அதிகமாக இருந்தால் கள்ளச்சாராயத்தை தேடி மக்கள் செல்வார்கள் என்று கூறி குறைந்த விலையில் காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்வதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் 1948 முதல் 1972 வரை கால் நூற்றாண்டாக மதுவின் வாடையை அறியாமல் ஒரு தலைமுறை வளர்ந்த நிலையில், 1972-ம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து இளம் தலைமுறைகளை கெடுத்தவர் என்ற பழி கலைஞர் மீது விழுந்திருகிறது. இப்போது கையடக்க காகிதக் குடுவைகளில் மதுவை அறிமுகம் செய்து பள்ளிக் குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுத்தவர் என்ற பழியும், அவப்பெயரும் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தான் அரசின் நோக்கம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்காக தமிழக அரசின் திட்டங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. ஒருபுறம் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நோக்குடன், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் வணிகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் நோக்குடன் மதுவிலக்கு சட்டத்தை நேற்று தான் திருத்தியுள்ளது. மறுபுறம் காகிதக் குடுவையில் மது விற்பனை செய்யத் திட்டமிடுகிறது என்றால், மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக்கியதன் மூலம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இல்லையா?
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆயிரமாயிரம் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அதை விடுத்து மலிவு விலை காகிதக் குடுவை மது போன்ற போகக்கூடாத ஊருக்கு தமிழக அரசு வழிகாட்டக் கூடாது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதை சாத்தியமாக்க மன உறுதியும், அரசியல் துணிச்சலும் தான் தேவை. மாறாக, காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை. எனவே, காகிதக் குடுவையில் 90 மி.லி. மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.