சிவகங்கை
திருப்பத்தூர் அருகே மது விற்றவர் கைது
|திருப்பத்தூர் அருகே மது பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
போலீசார் ரோந்து
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
912 மது பாட்டில்கள்
இதையடுத்து தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருப்பத்தூர் அருகே மருத்துவ நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 19 அட்டை பெட்டிகளில் 912 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் பட்டமங்கலத்தை சேர்ந்த அர்ஜூனன்(வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 912 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.