< Back
மாநில செய்திகள்
மதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி
மாநில செய்திகள்

மதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி

தினத்தந்தி
|
12 Sept 2024 11:00 PM IST

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில், ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக மாநாடு குறித்தும், மதுவிலக்கு குறித்தும் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "தி.மு.க அரசை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர். விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பைதான் திருமாவளவன் விடுத்துள்ளார். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்-அமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதல்-அமைச்சர் நினைக்கிறார். ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். இங்குள்ள சூழலை பொறுத்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் "படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம்" என அமைச்சர் ஈரோடு முத்துசாமி அறிவித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்