திருப்பூர்
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் போராட்டம்
|குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடைகளை அடைத்து இருந்தனர்.
குண்டடம்
குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடைகளை அடைத்து இருந்தனர்.
டாஸ்மாக் கடை
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த தேர்பாதையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் டாஸ்மாக் முன்பு திரண்டு டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். மேலும் அப்பகுதியில் கடை வைத்துள்ள வணிகர்கள், மளிகை கடை நடத்துபவர்கள், பேக்கரி, டீக்கடை மற்றும் கோழிக்கடை பிரியாணி கடை, ஓட்டல் ஆகியவற்றை அடைத்து டாஸ்மாக் கடை நிரந்தரமாக வேண்டும் என்று மதுப்பிரியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர்கள் மருதாசலம், மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது வணிக கடைக்காரர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் கூறியதாவது:-
வியாபாரம் பாதிக்கும்
இந்த டாஸ்மாக் கடை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டால் இங்கிருந்து நாங்கள் மது வாங்க 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் செல்ல வேண்டும். அதனால் நேரமும் அலைச்சலும் கூடும். மேலும் புறவழிச்சாலை செல்லும் போது விபத்துக்குள்ளாக நேரிடும். நாங்கள் மது வாங்கி அருந்திவிட்டு வரும்போது போலீசார் வாகன தணிக்கை செய்யும் பிடித்துக் கொள்கின்றனர். இதற்காக பஸ் ஏறி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோ, கார், மோட்டார்சைக்கிளில் செல்ல வேண்டும். எனவே டாஸ்மாக் கடையை மூடக்கூடாது.
அது மட்டுமல்ல தேர் பாதை கிராமம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய பகுதியாக விளங்குகிறது. இங்கு பெட்ரோல் விற்பனை நிலையம், உணவகங்கள், டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தேர்பாைதயை சுற்றி சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் எந்த ஒரு டாஸ்மாக் கடையும் இல்லாததால் கடைகளிலும் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டால் இங்கு செயல்பட்டு வரும் மளிகை கடைகள் பேக்கரிகள், ஓட்டல்களில் வியாபாரம் பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில் மற்றொரு தரப்பினர் டாஸ்மாக் கடையை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என கோஷமட்டனர். ஆனால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடை வேண்டும் என கோஷமிட்டனர்.