< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு
மாநில செய்திகள்

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

தினத்தந்தி
|
16 May 2023 12:19 AM GMT

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூனார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு மக்கள் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றவர்கள், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகளை அரசு தற்போது எடுத்து உள்ளது.

இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக நேற்று உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த சங்கர் (வயது 55), சுரேஷ் (49), தரணிவேல் (50) ஆகிய 3 பேர் இறந்தனர்.

நேற்று முன்தினம் எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (60), மலர்விழி (70), மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்த மண்ணாங்கட்டி (47) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எக்கியார்குப்பத்தை சேர்ந்த விஜயன் (55), மரக்காணத்தை சேர்ந்த சங்கர் (51), எக்கியார்குப்பம் கேசவவேலு (70), மஞ்சினி மகன் விஜயன் (55), ஆபிரகாம் (46), சரத்குமார் (55) ஆகியோரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் மூலம் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 44 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங்கரணை கிராமத்தில் உள்ள குளக்கரையில் வசித்து வந்த சின்னத்தம்பி (34), வசந்தா (40) ஆகியோர்கள் கள்ளச்சாரயம் அருந்தியதால் கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் இறந்தனர்.

பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வசித்து வந்த வெண்ணியப்பன் (65) மற்றும் சந்திரா (55) ஆகியோரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இறந்து கிடந்தனர். இறந்தவர்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை கிராமத்தைச் சார்ந்த மாரியப்பன் (60) நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1) அஞ்சாலை (22) பெருங்கருணை

2) சங்கர் (40) சின்னக்கயப்பாக்கம்

3) சந்திரன் பெருங்கரணை

4) ராஜி (32) புத்தூர்

5) முத்து (64) பெருங்கரணை

6) தம்பு (60) பெருங்கரணை

தப்பி ஓட்டம்

இதில் சங்கரும், ராஜியும் மருத்துவமனையில் இருந்து நேற்று தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை (40), ஒதியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (40), அதே பகுதியைச் சேர்ந்த வேலு (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள பனையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள், செங்கல்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறற்று வருகிறார்கள். அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்த்து ஆறுதல் கூறினார்

செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீயிடம் கேட்டறிந்தார்.

பின்னர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, போலீஸ் டி.ஜி.பி. செ. சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கி.சங்கர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி. பழனி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் என்.கண்ணன், விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத்தலைவர் பி.பகலவன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.ஸ்ரீநாதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல்துறையும், அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் போலீசார் தீவிர கவனத்துடனும், அக்கறையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாத போலீசார் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

இந்த பிரச்சினையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்