< Back
மாநில செய்திகள்
மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில்மேலும் ஒரு சாராய வியாபாரி கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில்மேலும் ஒரு சாராய வியாபாரி கைது

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.


மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மே மாதம் 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்தவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி, மரக்காணம் கரிப்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் மதன்குமார் ஆகிய 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஒருவர் கைது

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 12 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, ராஜா என்கிற பர்கத்துல்லா, ஏழுமலை, இளையநம்பி ஆகிய 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த அய்யனார் மகன் கணேசன் (வயது 26) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டின் அனுமதி பெற்று சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்து மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்