< Back
மாநில செய்திகள்
சாராயம் காய்ச்சும் உரிமை ரூ.2 லட்சத்துக்கு ஏலம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சாராயம் காய்ச்சும் உரிமை ரூ.2 லட்சத்துக்கு ஏலம்

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

கல்வராயன்மலை பொற்பம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்யும் உரிமை ரூ.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை

அடர்ந்த வனப்பகுதியான கல்வராயன்மலையில் உள்ள நீர் ஓடைகளில் பாய்ந்தோடும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது தவிர மலைப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் குடிசை தொழில் போன்று சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க வேண்டிய துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதால் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுல், கடத்தி விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் கள்ளிக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் இருந்தபோது கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவோர், கடத்தி விற்பனை செய்வோர் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதில் கைதனவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் போலீசுக்கு பயந்து பலர் ஊரை விட்டே ஓட்டம் பிடித்தனர்.

அதோடு சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்யும் நபர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ்காரர்கள் மீதும் இடமாற்றம், பணியிடை நீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் குறைந்தது.

மீண்டும் அதிகரிப்பு

ஆனால் தற்போது கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக எருக்கம்பட்டு, இன்னாடு, தொரடிப்பட்டு, சின்னதிருப்பதி, மேல்பாச்சேரி, தாழ்பாச்சேரி, கருவேலம்பாடி, குரும்பாலூர், தும்பராம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் சில கிராமங்களில் சாராயம் காய்ச்சுவதற்கும், விற்பனை செய்வதற்கான உரிமை ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாராயம் காய்ச்ச ஏலம்

இதை உறுதிசெய்யும் வகையில் இங்குள்ள பொற்பம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்யும் உரிமை ரூ.2 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றுள்ளது. அதாவது 3 மாதத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் ஓராண்டுக்கு சாரயம் விற்பனை செய்ய ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த உரிமையை துருவூர் கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர் எடுத்து இருப்பதாகவும், ஏலத்துக்கான முதல் கட்ட தவணை தொகையை பொற்பம் கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களிடம் கொடுத்து விட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்வராயன்மலையில் நிலையில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்யும் உரிமம் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்