சென்னை
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு - மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து
|வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கும் பணிகள் 3 ஆயிரத்து 750 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 7 லட்சத்து 45 ஆயிரத்து 662 வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். எனவே, வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக வரும்போது, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 80 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று முன்தினம் அவர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் துணை கமிஷனர் விஷூ மஹாஜன் (வருவாய் மற்றும் நிதி), மாவட்ட வருவாய் அதிகாரி குலாம் ஜீலானி பாபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.