குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
|இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அண்மையில் அறிவிக்கை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, மதச்சார்பின்மை என்கிற அரசமைப்பு சட்ட விழுமியத்துக்கு முரணாக, குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை இச்சட்டம் பாகுபடுத்துகிறது. நாடாளுமன்றம் பின்பற்ற வேண்டிய அரசமைப்பு சட்டத்தை, நாடாளுமன்றத்தை வைத்தே மீறுவது பா.ஜ.க.வுக்குக் கைவந்த கலையாக உள்ளது.
2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும். மோடி அரசின் அனைத்து பம்மாத்து முயற்சிகளும் எடுபடாமல் தவிடுபொடியாகியுள்ள நிலையில் தற்போது கடைசி ஆயுதமாக இச்சட்டத்திற்கான விதிமுறைகளை அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
2019-ல் சட்டம் வந்த போது இந்தியா முழுவதும் ஷாஹின்பாக் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்கள் வெடித்தன. சிபிஐ (எம்) மற்றும் இதர அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. எதிர்ப்பின் காரணமாகக் கிடப்பில் போட்டு வைத்த சட்டத்தை 2024 தேர்தல் நெருங்கும் போது, பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கமே இதில் மேலோங்கி நிற்கிறது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்ற சூழல், இந்திய குடிமக்களாக ஏற்கனவே உள்ளவர்களில் எந்தப் பகுதியினரின் குடியுரிமைக்கும் எந்நேரம் வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, 9 மாநிலங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாங்கள் பராமரிக்க மாட்டோம் எனக் குரல் கொடுத்தன. தற்போது விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னணியில், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் அதனை அமல்படுத்துவதற்கு உறுதியான மறுப்பைத் தெரிவித்துள்ளன. மத்திய அரசு தந்திரமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டு பதிவு மற்றும் பராமரிப்பு பணியில் மாநில அரசாங்கத்துக்கு இடமளிக்காத விதத்தில் விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
இஸ்லாம் என்கிற அமைதியான மதத்துக்கு, துன்புறுத்தும் மதம் என உலக அளவில் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என மத்திய பா.ஜ.க. அரசு உள்துறை அமைச்சகம் கூறி இருப்பது, 'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்' தான் தெரிகிறது.
இது மத்திய அரசின் வரலாற்றுப் பிழை என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது நகைப்பிற்குரியது. குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆதரித்தன. மாநிலங்களவையில் அ.தி.மு.க. 11, பா.ம.க. 1 வாக்குகள் எதிர்த்து விழுந்திருந்தால் சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்த கொடூரமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கண்டனக் குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.