< Back
மாநில செய்திகள்
பொது இடத்தில் இப்படியா...? வரம்பு மீறும் காதல் ஜோடிகள்... முகம் சுளிக்கும் கோவை மக்கள்
மாநில செய்திகள்

பொது இடத்தில் இப்படியா...? வரம்பு மீறும் காதல் ஜோடிகள்... முகம் சுளிக்கும் கோவை மக்கள்

தினத்தந்தி
|
29 May 2024 10:12 AM IST

கோவை பூங்காக்களில் காதல் ஜோடிகள் வரம்பு மீறும் செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

கோவை,

இந்த உலகத்தில் நம்மில் உண்டாகும் ஒரு விஷயம்தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அதை விரும்பாமல் யாருமே இருக்க மாட்டார்கள். அன்பு, பாசம், அக்கறை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டு இருப்பது தான் காதல். நீங்கள் தேர்வு செய்யும் துணை, அது உண்மையாக இருக்க வேண்டும்.. அப்போதுதான் உங்கள் வாழ்வில் உண்மை சங்கமிக்கும், உடலுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

அதை விட்டுவிட்டு, காதலியை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்துவிட்டு துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்தபடி அழைத்துச்செல்வது, பொதுமக்கள் கூடும் பூங்காக்களுக்கு சென்று மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு பொதுமக்கள் முகம் சுளிக்க வைக்கும் வரம்பு மீறிய செயலில் ஈடுபடுவது உண்மையான காதல் அல்ல.

அப்படிதான் கோவையில் உள்ள பூங்காக்களில் நடந்து வருகிறது. குறிப்பாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை ஒட்டி உள்ள தாவரவியல் பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட குளக்கரை பூங்காக்களில் இதுபோன்று தான் பொதுமக்களின் முகம் சுளிக்க வைக்கும் செயலில் காதல் ஜோடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை வ.உ.சி. தாவரவியல் பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் வந்து செல்பவர்கள் அதிகம். அதிலும் குடும்பத்துடன், குழந்தைகளை அழைத்து பொழுதுபோக்குக்காக பலர் வருகின்றனர். ஆனால் அங்கு காதல் ஜோடிகள் செய்யும் செயல்கள் வரம்பு மீறும் வகையில் இருக்கிறது. எனவே அங்கு குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர் தயங்கும் நிலை உள்ளது.

மரம், புதருக்கு இடையே மறைந்து அமர்ந்து கொண்டு அவர்கள் செய்யும் செயல்கள் ஏற்கக்கூடியது அல்ல. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை காதல் ஜோடியினர் தவிர்க்க வேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் பல இடங்கள் உள்ளன. அதற்காக இப்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் இப்படி செயல்படுவது தவறானது ஆகும். இதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

கல்லூரி முடிந்ததும் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா, காலையில் கல்லூரிக்கு செல்கிறார்களா என கண்காணிப்பது அவசியம். இதுதவிர வாலாங்குளக்கரை பூங்கா, உக்கடம் குளக்கரை பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் எல்லை மீறி செயல்படுவது அதிகமாக நடந்து வருகின்றன. எனவே இந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் காதல் ஜோடிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்