திண்டுக்கல்
பலத்த காற்றுடன் சாரல் மழை
|கொடைக்கானலில், பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வாரிய ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.
சாரல் மழை
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே பலத்த காற்று வீசியதால், கொடைக்கானல்-பழனி சாலையில் ஆணைகிரி சோலை அருகே 6-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அப்போது மேலும் ஒரு மரம் மின்கம்பத்தின் மீது விழுந்தது அதில் மின்கம்பம் உடைந்தது.
மின் ஊழியர் காயம்
இதுகுறித்து தகவலறிந்து, அதனை சீரமைக்க வந்த மின்வாரிய ஊழியர் குருசாமி (வயது 58) மீது மற்றொரு மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது.
காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மின் தடையால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலத்த காற்று மற்றும் சாரல் மழை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சுற்றுலாப்பயணிகளும் அறைகளிலேயே முடங்கினர்.
சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், பலர் சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.