< Back
மாநில செய்திகள்
கடும் குளிருடன் சாரல் மழை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கடும் குளிருடன் சாரல் மழை

தினத்தந்தி
|
8 Dec 2022 7:00 PM GMT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடும் குளிருடன் சாரல் மழை பெய்தது.

மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் வழக்கம் போல் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8.30 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.

மேலும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்ததால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழவில்லை. அதோடு தொடர்ந்து வானில் சூழ்ந்த மேகத்தால் காலை முதல் மாலை வரை சூரியனை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே மாலை 6 மணிக்கு மேல் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

கடும் குளிர்

இதைத்தொடர்ந்து பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழை இரவு வரை விட்டுவிட்டு பெய்தபடி இருந்தது. அவ்வப்போது காற்றும் வீசியது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக இரவில் பனிப்பொழிவால் குளிர் நிலவி வந்தது.

இதற்கிடையே நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த சாரல் மழையும் குளிரை பரிசாக தந்தது. இதனால் நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் காணப்படும் திண்டுக்கல், பழனி பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கே மக்கள் வீடுகளில் முடங்கினர்.

வெறிச்சோடிய கொடைக்கானல்

கொடைக்கானலை பொறுத்தவரையில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் குளிர் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீடுகளிலும், அறைகளிலும் முடங்கினர். பலர் சாலை ஓரங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். மேலும் புயல் அறிவிப்பு எதிரொலியாக, கொடைக்கானல் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடின.

மேலும் செய்திகள்