ஈரோடு
அனைத்து இடங்களிலும் சாரல் மழை; கடுங்குளிரால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
|ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சாரல் மழை பெய்தது. கடுங்குளிரால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சாரல் மழை பெய்தது. கடுங்குளிரால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள்.
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து இடங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சென்றவர்கள் பெரும் அவதிப்பட்டார்கள். சிலர் மழையை பொருட்படுத்தாமல் மழை கோட்டு அணிந்து சென்றனர்.
இதேபோல் பள்ளிக்குழந்தைகளை பெற்றோர் மழையில் நனையாமல் குடை பிடித்தபடி பத்திரமாக கொண்டு வந்துவிட்டார்கள். விவசாய தோட்டங்களில் மழை தண்ணீர் தேங்கியிருந்தது.
சாரல் மழை
தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் லாரி, கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியும், தண்ணீர் துடைப்பானை (வைபர்) இயக்கியபடியும் சென்றதை காணமுடிந்தது.
ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், பவானிசாகர், கொடுமுடி, ஊஞ்சலூர், மொடக்குறிச்சி, கோபி, லக்கம்பட்டி, மொடச்சூர், கரட்டூர், நாயக்கன் காடு, பாரியூர், குள்ளம்பாளையம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை லேசான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது.
கடும் குளிர்
டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, பெருமுகை மற்றும் அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
இதேபோல் தாளவாடி, கெட்டவாடி, மெட்டல்வாடி, தலமலை, ஆசனூர், குளியாடா, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் நிற்காமல் சாரல் மழை பெய்தது. இதனால் கடுமையான குளிர் நிலவியது. இதன்காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.
வீட்டுக்குள் முடங்கினர்
சோலார், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், கஸ்பாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதுடன், குளிர் காற்றும் வீசியது. இதன்காரணமாக வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மேலும் சாரல் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.