திருப்பூர்
கானூர் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு
|சேவூர் அருகே உள்ள கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நேற்று நடைபெற்றது.
சேவூர் அருகே உள்ள கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நேற்று நடைபெற்றது.
கானூர் தர்கா
அவினாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா உள்ளது. இது தமிழகத்தில் மிகவும் சிறப்புப்பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சந்தனக்கூடு உருஸ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூரு ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
கார்த்திகை தீபம்
இந்த நிலையில், கார்த்திகை தீப திருநாளான நேற்று அப்பகுதி கிராம மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதுகுறித்து தர்காஹஜ்ரத், சம்சுதீன் கூறுகையில், தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கிறார்கள்.
மேலும் கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவதை ஆண்டு தோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சந்தனக்கூடு உருஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர் என்றார்.