< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 'லிப்ட்' வசதி

தினத்தந்தி
|
23 Oct 2023 12:00 AM IST

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக ‘லிப்ட்' வசதி அமைக்கப்படுகிறது.

ரெயில்கள்

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பழமையானதாகும். புதுக்கோட்டை வழியாக சென்னை, திருச்சி, காரைக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, கோவை மற்றும் வட மாநிலங்களில் புவனேஸ்வர், அஜ்மீர் ஆகிய ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் புதுக்கோட்டையில் இருந்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

புதுக்கோட்டை வழியாக செல்லும் ரெயில்களின் முன்பதிவு இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பியே காணப்படுகின்றன. காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கிறது. இதனால் புதுக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

'லிப்ட்' வசதி

இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் அம்ரித் திட்டத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மதுரை கோட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் அடங்கும். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் புதிய முனைய கட்டிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் வர உள்ளன.

இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகளில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலாவது நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்ல நடைபாதை மேம்பாலம் வசதி உள்ளது. இதில் படிக்கட்டுகளில் பயணிகள் ஏறி, இறங்கி செல்வது உண்டு. இந்த படிக்கட்டுகளில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கி செல்வதில் சற்று சிரமமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் அருகே 'லிப்ட்' வசதி வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பணிகள் விரைவில் நிறைவடையும்

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 2 லிப்டுகள் அமைக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபாதை மேம்பாலம் அருகே இந்த 'லிப்ட்' அமைக்கப்படுகிறது.

இதேபோல 2-வது நடைமேடையிலும் மற்றொரு லிப்ட் அமைக்கப்படுகிறது. இந்த லிப்ட்டில் ஏறி பயணிகள் எளிதாக நடைபாதை மேம்பாலத்திற்கு சென்று வர முடியும். இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்