திருப்பூர்
அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் பழுது
|திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் ஏறி, இறங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 'லிப்ட்' அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் ஏறி, இறங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
அடிக்கடி பழுதாகும் 'லிப்ட்'
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் தற்போது அரசு மருத்துவக்கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இது தலைமை ஆஸ்பத்திரியாக இருப்பதால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவதால் ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த நிலையில் இங்கு தரைத்தளத்துடன் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் மகப்பேறு சிகிச்சை மற்றும் பொது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் ஆண்கள் உள்பட ஏராளமானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த கட்டிடத்தில் உள்ள 'லிப்ட்' அடிக்கடி பழுதாகி விடுவதால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மாடிப்படி ஏறி இறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பொதுவாக பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடங்களில் இரண்டு 'லிப்ட்' அமைக்கப்படும் இதனால் ஒரு 'லிப்ட்' பழுதானால் மற்றொரு லிப்டை பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு ஒரு 'லிப்ட்' மட்டுமே உள்ளது.
நோயாளிகள் அவதி
இதனால் இந்த 'லிப்ட்' பழுதாகும் போது நோயாளிகளும், பார்வையாளர்களும் மாடிப்படியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோல் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிகிச்சை பெறும் நோயாளிகள் 5 மாடி கட்டிடத்தில் மேலே ஏறவும், கீழே இறங்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கை, கால்களில் காயமடைந்தவர்கள் சாய்வு தளத்தின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பியை பிடித்தவாறு சிரமத்துடன் பரிதாபமான முறையில் நடந்து செல்கின்றனர்.
மேலும், நோயாளிகளை சக்கர நாற்காலியில் அழைத்து செல்வதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக பல மாடி கட்டிடத்தில் நோயாளிகளை சக்கர நாற்காலியிலும், ஸ்டிரெச்சரிலும் அழைத்து செல்வதற்குள் ஊழியர்கள் சோர்ந்து விடுகின்றனர்.
இதனால் அவர்கள் சற்று நிலைதடுமாறினாலும் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு அடிக்கடி பழுதாகி வரும் லிப்டை நல்ல முறையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். ஆஸ்பத்திரி நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ளுமா?.