6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை
|கோவை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 32). திருமணமாகவில்லை.இவர் மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக பணியாற்றி வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 24-6-2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதை அந்த சிறுமியின் தந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் சின்னராஜை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சின்னராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்து சின்னராஜிக்கு விரைவாக தண்டனை வழங்க வழிவகுத்த பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பெண் தலைமை காவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீசாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் பாராட்டினர்.