தேனி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
|போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். பின்னர் அந்த சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்தார்.
வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயாரிடம் கூறினார். சிறுமியின் தாயார் இதுதொடர்பாக போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆயுள் தண்டனை
அதன்பேரில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட முருகனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.