அரியலூர்
தாயை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை; அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
|தாயை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தாமரைக்குளம்:
விஷம் குடித்ததாக நாடகம்
அரியலூர் மாவட்டம், சன்னாவூரை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 50). விவசாயி. இவரது தாய் தனம்(70). கடந்த 29.11.2020-ந் தேதி வயலில் சோளக்கொல்லைக்கு அடிக்க களைக்கொல்லி மருந்தை தனம் வாளியில் கலக்கி கொண்டிருந்தார். அப்போது அவர், உதயகுமாரிடம் கோபித்துக்கொண்டு சென்ற அவரது மனைவி ஜெயலட்சுமியை அழைத்து வருமாறு கூறியதாகவும், அதற்கு உதயகுமார் மறுத்ததால், வாளியில் கலக்கி வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) தனம் குடித்து விட்டதாகவும் உதயகுமார் சத்தம் போட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தனம் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயுள் தண்டனை
இந்நிலையில் பிரேத பரிசோதனையில், தனம் மூச்சுத்திணறல் காரணமாக இருந்தது தெரியவந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சொத்து பிரச்சினை காரணமாக, அவர் தனது தாயை நூல் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாக, தெரிவித்தார். இதையடுத்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து உதயகுமாரை கோர்ட்டில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.