தர்மபுரி
இளம்பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
|தர்மபுரி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தர்மபுரி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அத்தை மகள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது கிராமத்தை சேர்ந்த அத்தை மகள் சத்யா (வயது 23) என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் சத்யாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சத்யா கடகத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தர்மபுரிக்கு வந்த சாம்ராஜ், கடகத்தூரில் தங்கி இருந்த சத்யாவிற்கு போன் செய்து தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். இதனால் சத்யா தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
அங்கு நின்று கொண்டிருந்த மேட்டூர் செல்லும் பஸ்ஸில் அமர்ந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது நான் உன்னை காதலிக்கிறேன். வேறு இடத்தில் எப்படி உனக்கு திருமணம் நிச்சயம் செய்யலாம் என்று கேட்டு சாம்ராஜ், சத்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சாம்ராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யாவின் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாம்ராஜை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சாம்ராஜ் மீதான கொலை குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து சாம்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.