< Back
மாநில செய்திகள்
உயிரா?, இரையா? தண்ணீருக்குள் நடந்த வனவிலங்குகளின் யுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

உயிரா?, இரையா? தண்ணீருக்குள் நடந்த வனவிலங்குகளின் யுத்தம்

தினத்தந்தி
|
13 Sept 2023 11:51 PM IST

கொடைக்கானல் அருகே உயிரா?, இரையா? என தண்ணீருக்குள் வனவிலங்குகளின் யுத்தம் நடந்தது.

கடமானை விரட்டிய செந்நாய்கள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கூக்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே இடம்பங்கரை என்ற இடத்தில் குளம் இருக்கிறது. மன்னவனூர் வனச்சரகத்தில் உள்ள இந்த குளம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த குளத்தில் வனப்பகுதியில் வலம் வருகிற விலங்குகள் தண்ணீர் குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக கடமான் ஒன்று வந்தது.

இதனை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த செந்நாய்கள் பார்த்து விட்டன. தங்களுக்கு நல்ல தீனி கிடைத்து விட்டதாக கருதி, 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கடமானை விரட்டின. உயிர் பிழைக்க கடமான் ஓட்டம் பிடித்தது. இருப்பினும் செந்நாய்கள் விடாமல் துரத்தின.

தண்ணீருக்குள் யுத்தம்

உயிர் வாழ ஆசைப்பட்டு கடமான் ஓடியது. வேட்டையாடி பசியாற நினைத்து செந்நாய்கள் அதனை விரட்டின. உயிரா?, பசியா? என்ற கோணத்தில் வனவிலங்குகளின் ஓட்டம் தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் உயிர் தப்பிப்பதற்காக குளத்துக்குள் கடமான் குதித்தது. அப்படியாவது தன்னை விட்டு செந்நாய்கள் ஓடி விடும் என்று கடமான் கருதியது. குளத்தில் ததும்பிய தண்ணீரில் தத்தளித்தப்படி நீந்தி கொண்டிருந்தது.

ஆனால் செந்நாய்கள், கடமானை விட்டபாடில்லை. தண்ணீருக்குள் 4 செந்நாய்களும் பாய்ந்து குதித்தன. மீதமுள்ள செந்நாய்கள் கரையில் இருந்தபடி கடமானை கண்காணித்து கொண்டிருந்தன. தண்ணீருக்குள் குதித்த செந்நாய்கள், கடமானை கடித்து குதறின. யுத்த களமாக மாறி விட்டது குளம். சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக கடமான் உயிருக்கு போராடியது.

ரத்தம் சொட்ட, சொட்ட

உயிரை காக்கவும், இரைக்காகவும் போராடிய இந்த காட்சியை கண்ட மலைக்கிராம மக்கள் அதிா்ச்சி அடைந்தனர். சிலர் தங்களது செல்போனிலும், கேமராக்களிலும் தத்ரூபமாக புகைப்படம் எடுத்தனர். ஆட்கள் வருவதை கண்டதும், செந்நாய்கள் குளத்தில் இருந்து வெளியேறின.

சிறிதுநேரம் கழித்து கடமானும் தண்ணீரில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட வெளியேறி அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. குளத்தில் இருந்து எப்படியும் கடமான் வெளியே வரும் என்ற நம்பிக்கையில், கரையில் பதுங்கியபடி காத்திருந்த செந்நாய்கள் கடமானை மீண்டும் விரட்டின.

செந்நாய்களுக்கு இரை

படுகாயம் அடைந்து, பாதி உயிர் போன நிலையில் தள்ளாடியபடி கடமான் ஓடியது. இதனால் விரட்டி சென்ற செந்நாய்களிடம் சிக்கி அதற்கு இரையாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடமான்-செந்நாய்களிடையே ஏற்பட்ட போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் கூறுகையில், கூக்கால் ஏரிப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவை அடிக்கடி மான்களை வேட்டையாடுவதை பலமுறை நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்