< Back
மாநில செய்திகள்
பள்ளி தலைமை ஆசிரியரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
3 Sept 2023 12:00 AM IST

பள்ளி தலைமை ஆசிரியரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (வயது 58). இவருடைய மனைவி உஷாராணி (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வராஜ் தினமும் உடையார்பாளையத்திலிருந்து சோழன்குறிச்சி வழியாக தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற செல்வராஜ், மாலை 6 மணியாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை, மனைவி உஷாராணி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது உடையார்பாளையம்-சோழங்குறிச்சி சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் இறந்து கிடந்தார்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் பணத்தை வழிப்பறி செய்யும் நோக்கத்தில் கத்தியால் செல்வராஜை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அந்த ஆசாமி மற்றொருவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சேகர் மகன் வெங்கடேசன் (23) என்பவரை போலீசார் பிடி த்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜை கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில் நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றவாளியான வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து, வெங்கடேசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னத்தம்பி வாதாடினார்.

மேலும் செய்திகள்