சென்னை
சிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|சென்னை வேளச்சேரியில் சிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் குணசீலன் (வயது 33). இவர் தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை மோட்டார்சைக்கிளில் டியூசனுக்கு அழைத்துச்சென்று வந்துள்ளார்.
பெற்றோருக்குத் தெரியாமல் ஷாப்பிங் மால், திரையரங்கு என சிறுமியை அழைத்துச்சென்று, நட்பாக பழகியுள்ளார். பின்னர், செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்த குணசீலன், தனிமையில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர், அந்த ஆபாச வீடியோக்களை அனுப்பி சிறுமியை மிரட்டிவந்துள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வீட்டின் குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிந்து குணசீலனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குணசீலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு சாகும்வரை சிறையில் இருக்கும்வகையில் ஆயுள் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.