புதுக்கோட்டை
மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
|வீட்டில் சாப்பாடு தயார் செய்யாததால் ஆத்திரத்தில் மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூலித்தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குமுளாக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சேகரின் மனைவி அமிர்தவள்ளி (19). சேகர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-2-2021 அன்று இரவு வீட்டில் சாப்பிடுவதற்கு சேகர் வந்தார். அப்போது மனைவியிடம் சாப்பாடு தயாராகி விட்டதா? என கேட்டிருக்கிறார். அவரோ சாதம் தயாராகவில்லை என்று பதில் அளித்ததோடு, கணவரிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
ஆயுள் தண்டனை
இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அமிர்தவள்ளி மீது ஊற்றி சேகர் தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமிர்தவள்ளி பரிதாபமாக இறந்தார். து தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சேகரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.