< Back
மாநில செய்திகள்
பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
13 Jun 2023 11:30 AM IST

சென்னை கிண்டியில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டைச் சேர்ந்தவர் விஜயா (வயது 50). இவரது மகள் வசந்தி (22). இவருக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் வசந்தி கர்ப்பமானார். திருமணமாகாத நிலையில் வசந்தி கர்ப்பமானதால் அவருக்கு பிறக்கும் குழந்தையை கொன்று விட முடிவு செய்தனர்.

கடந்த 17.9.2018 அன்று வசந்திக்கு பெண் குழந்தை பிறந்தநிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையை பானைக்குள் வைத்து மூடினர். இதில், மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. இதன்பின்பு, அந்த குழந்தையை அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசி சென்றனர்.

இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயா, வசந்தி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வாலிபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்