< Back
மாநில செய்திகள்
பல்லடம்: மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மாநில செய்திகள்

பல்லடம்: மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
14 Oct 2022 9:51 PM IST

பல்லடம் அருகே மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்:

பல்லடம் அருகே கவுண்டம்பளையம்புதூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 50). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் ராஜேஸ்வரி (36) என்பவரை திருமணம் செய்து வசித்து வந்தார். ராஜேஸ்வரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் விவாகரத்து பெற்று அதன்பிறகு கருப்புசாமியை 2-வது திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 3-11-2012 அன்று அதிகாலை 2 மணிக்கு கருப்புசாமிக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்புசாமி, ராஜேஸ்வரியை குழியலறையில் தள்ளி மண்எண்ணை ஊற்றி தீ பற்ற வைத்து விட்டு சென்றார். இதன்பிறகு மின்சாரம் தாக்கி தனது மனைவி இறந்ததாக உறவினர்களிடம் கூறினார்.

இந்தநிலையில் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ராஜேஸ்வரியின் தாயார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக கருப்புசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சிறந்த முறையில் சாட்சியை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பல்லடம் போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.

மேலும் செய்திகள்