< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கட்டிட மேஸ்திரி கொலையில் காதலி-தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை-குழந்தையுடன் சிறையில் அடைப்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 10:49 PM IST

காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியை கொன்ற காதலி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொழிலாளிக்கும் ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து 1½ வயது குழந்தையுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆரணி

காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியை கொன்ற காதலி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொழிலாளிக்கும் ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து 1½ வயது குழந்தையுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கட்டிட தொழிலாளி

ஆரணி சைதாப்பேட்டை கமண்டல நாக நதி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மண்ணு முதலியாரின் மகள் கிருஷ்ணவேணியும் (37) காதலித்து வந்துள்ளனர். இவர்கள் பலமுறை தனிமையில் இருந்து உள்ளனர்.ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதற்கிடையில் கிருஷ்ணவேணிக்கு சைதாப்பேட்டை முள்ளிப்பட்டு தெருவைச் சேர்ந்த தொழிலாளியான அஜித்குமாருடன் (21) தொடர்பு ஏற்பட்டது இதனை அறிந்த சுரேஷ் கிருஷ்ணவேணியை பலமுறை கண்டித்துள்ளார்.

கொலை

இதனால் கிருஷ்ணவேணி ஆத்திரமடைந்தார். அவர் சுரேசை அஜித்குமாருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதியன்று சுரேசை வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வருமாறு கிருஷ்ணவேணி அழைத்தார்.

அப்போது கிருஷ்ணவேணி, அஜித்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சுரேசை முள் தடியால் தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.

இது குறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட விரைவு அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜமூர்த்தி வாதிட்டார். இதில் அஜித்குமார், கிருஷ்ணவேணி ஆகிய இருவருக்கும் நீதிபதி கே.விஜயா ஆயுள் தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

அபராத தொகை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறினார்.

குழந்தையுடன் சிறையில் அடைப்பு

தற்போது கிருஷ்ணவேணிக்கும் அஜித் குமாருக்கும் பிறந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. குழந்தையுடன் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்