விவசாயி கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
|கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் சிறை தண்டனையோடு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் நேசமணி(வயது 60), விவசாயி. நேசமணிக்கும், அவரது உறவினர் ஞான சிகாமணி என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஞானசிகாமணியை நேசமணியின் மகன் முத்துராஜ் தாக்கினார் . முத்துராஜ்ஜும் விவசாய வேலைதான் செய்து வந்தார். முத்துராஜ்-ஐ பழி வாங்குவதற்காக ஞான சிகாமணியின் மகன்கள் திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 2005 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று ஞான சிகாமணியின் மகன்கள் செல்வன் (33), செல்வசிங் (32) மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 9 பேர் சேர்ந்து நேசமணியின் மகன்கள் முத்துராஜ் (34), கோபால கிருஷ்ணன் (35) ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் முத்துராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த இரு கொலைகள் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முத்துராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார்.
இந்த கொலை வழக்கில் செல்வன், அவரது சகோதரர் செல்வ சிங் மற்றும் அவரது நண்பர்கள் சுரேஷ், ரசீத், துரை ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.