< Back
மாநில செய்திகள்
2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி
மாநில செய்திகள்

2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி

தினத்தந்தி
|
2 Sept 2023 2:20 AM IST

2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஆகும். சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி எல்.ஐ.சி. தனது 67-வது ஆண்டினை கொண்டாடி வருகிறது.

ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) தனது 67-வது ஆண்டை சிறப்பான செயல்திறனுடன் கொண்டாடி வருகிறது. இந்தியா முழுவதும் காப்பீடு மற்றும் சேமிப்பு கலாசாரத்தை வளர்ப்பதில் எல்.ஐ.சி. தொடர்ந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மார்ச் மாதத்தோடு நிறைவடைந்த நிலவரப்படி எல்.ஐ.சி. 27.74 கோடி பாலிசிகளை வழங்கியுள்ளது. மதிப்புமிக்க தங்களது பாலிசிதாரர்கள், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் வகையில் சிறப்பு மீட்பு முகாமினை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 1956-ம் ஆண்டு தொடக்கம் முதலாக ரூ.5 கோடியில் எல்.ஐ.சி. தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி எல்.ஐ.சி. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்து 205 கோடி ஆகும். 2022-23 நிதி ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, சந்தையில் தலைவராக எல்.ஐ.சி. உயர்ந்து நிற்கிறது. இந்த நிதி ஆண்டில் பிரீமியம் மூலம் பெறப்பட்ட வருவாய் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 900 கோடி ஆகும். மேலும் 2 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரம் புதிய பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.

8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மண்டலங்கள், 2 ஆயிரத்து 48 கிளை அலுவலகங்கள், 1,580 அலுவலகங்கள் மற்றும் 13 லட்சத்து 47 ஆயிரம் ஏஜெண்டுகள், வாடிக்கையாளர்கள் 2022-23 நிதி ஆண்டில் சிறப்பாக சேவையாற்றினார்கள். ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 938 கோடியே 63 லட்சம் மதிப்பிலான 2 கோடியே 25 லட்சத்து 51 பாலிசி கிளெய்ம்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எல்.ஐ.சி.யின் பாலிசி முதிர்வு கிளெய்ம் 92.65 சதவீதம் ஆகவும், பாலிசிதாரர் இறப்படையும் சமயத்திலான முதிர்வு கிளெய்ம் 98.60 சதவீதம் ஆக உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு சமுதாய வளர்ச்சிக்காக எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை வறுமை ஒழிப்பு, பேரிடர் மீட்பு, கல்விக்கு உதவி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தியது. எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி ரூ.198 கோடியே 11 லட்சம் வினியோகித்துள்ளது. 67-வது ஆண்டினை கொண்டாடி வரும் எல்.ஐ.சி. தனது பாலிசிதாரர்களின் பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது.

மேற்கண்ட தகவல் எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்