விழுப்புரம்
விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
|விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு போலி விதைகள், தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, பதுக்குவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேளாண்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று வேளாண்மை துறை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு உரக்கடைகளுக்கு திடீரென சென்று விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா, பதுக்கல் நடைபெறுகிறதா என ஆய்வு செய்தனர்.மேலும் விவசாயிகளுக்கு தரமான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா, அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா, உரக்கடையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், தற்காலிக பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்டதற்காக 5 உரக்கடை விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக விற்பனை தடை மற்றும் உரிமங்களை ரத்து செய்தனர். மேலும் உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்களின் உரிமங்கள் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.